tzf;fk;

Wednesday, December 1, 2010

ஆதிரை என்றொரு அகதி

ஐந்து வயதான ஆதிரைக்கு
கடல் புதிது
கேள்விகளாலான அவள்
அன்றைக்கு மெளனமாயிருந்தாள்
துவக்குச் சன்னங்களுக்குப்
பிடரி கூசி
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும்
படகினின்று உயிர் தளும்பிய அவ்விரவில்
கடல் குறித்த எல்லாக் கவிதைகளும்
எனக்கும் மறந்துவிட்டிருந்தன
கடல் ஒரு
நீர்க்கல்லறை என்பதன்றி.

கழிப்பறை வரிசை...
கல் அரிசி...
சேலைத் திரை மறைவில்
புரியாத அசைவுகள்...
காவல் அதட்டல்...
கேள்விகளாலான அவள்
ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
பாழடைந்த நகர் போலிருந்தாள்.

சுவர் சாய்ந்து
தொலைவனுப்பிய உன் விழிகளுள்
விமானங்கள் குத்திட்டுச் சரிகின்றனவா?
குருதிப் பிசுபிசுப்பு காலொட்டும்
முடிவிலாத் தெருவொன்றில்
நடந்து கொண்டிருக்கிறாயா?


என் சின்ன மயில் குஞ்சே!
போரோய்ந்து திரும்புமொரு நாளில்
பூர்வீக வீட்டைப் பிரிய மறுத்து
போருள் தங்கிவிட்ட
என் தாய்முன் இளகலாம்
கெட்டித்து இறுகிய உன் கேள்விகள்.

"அம்மம்மா! அவையள் ஏன் என்னை
அகதிப்பொண்ணு எண்டு கூப்பிட்டவை?"


---

தேவ வசனம்


தனிமைத் தாழியுள்
தன்னைக் கிடத்தியவளைப் பார்த்துவரப் போனேன்
அவள் கண்ணிலிருந்து
சுண்டியெறிந்த துளி
பல்திவலைகளாகப் பெருக
வீட்டினுள்ளே மூழ்கிக்கொண்டிருந்தாள்.

வெளியே அழைத்துப்போனேன்
மஞ்சள் பூவலைவுறும் வெளிகளில்
இல்லாத பட்டாம்பூச்சிகளை
குசலம் கேட்டாள்.
காலம் கால் நழுவும் கோயில்களில்
தானுமோர் கல்லென
இறுகிச் சொன்னாள்.
மதுச்சாலையொன்றில் ஒலித்த
ஒற்றை சாக்சபோன் இசையை
நிறுத்தும்படி பரிசாரகரிடம்
பணிந்து கேட்டாள்.

வெயில் கருக்கும் கூடல்மாநகரை
'நினைவின் மது'என்கிறாள்
'வின்கானிஸ்'உபயத்தில்
யன்னல்கள் பெயர்ந்து திரியும் இவ்விரவில்
மணிக்கூண்டில் ஒரு மணி அடித்து
பைபிள் ஒலிக்கிறது
'நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை
உன்னைக் கைவிடுவதுமில்லை'
எழுந்தமர்ந்து சிலுவைக்குறியிட்டு
'நெகிழும்படியான தேவவசனங்களை
சந்தர்ப்பத்திற்கேற்றபடி எதிரொலிக்கிறவர்களை
செருப்பாலடியும் என் தேவனே!'என்றவள்
தன் தனிமைத் தாழியுள்
இறங்கி மரிக்கிறாள்.


'வின்கானிஸ்'-ஒருவகை வைன்

----

திரும்பவியலாத வீடுகள்

மிகுதொலைவில் இருக்குமென் வீடு
ஒரு மரணப்பொறி
இல்லை...
கல்லாலாய கனவு
இருள்பச்சை நிற வாகனங்கள்
மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள்வேலிகள்
இரும்புத்தொப்பிகளின் அடியில்
வெறியில் மினுக்கிடும் விழிகள்
இவை தாண்டி
கண்ணிக்குத் தப்பி
விதை பொறுக்கும் பறவையென வருகிறேன்.

குளிர்தரையினுள்ளே துடிக்குமோ
வீட்டின்
வெம்மைசூழ் இதயம்...!

உருக்கி ஊற்றிய தங்கமென
முற்றம் படரும் வெயிலை
கண்களுள் சேமிப்பேன்
கிணற்றின் ஆழ இருளினுள்
பளிச்சிடும் நாணயங்களை
ஓராண்டு செலவழிக்க
பொறுக்கிக் கொள்வேன்
ஓ கிளைகொள்ளாத லசந்தரா!
என் கனவினில் சொரிக சொரிக
நின் இளஞ்சிவப்பு மலர்கள்.

பூனைக்குட்டி
என் வாசனையைத் தொடராதே
தேசப்பிரஷ்டம் செய்யப்பட்டவளாயினேன்
பூட்டப்பட்ட என் அறையின் முன்னமர்ந்து
தீனமாய் அழைக்காதே என் செல்லமே!
அங்கில்லை நான்.

திரும்பவியலாத
யாரோ ஒருவர்
இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்
விழி பனிக்க.

----

பிதாமகனின் மீள்வருகை


இம்முறை பிதாமகன்
புத்தக அடுக்குப் பக்கம் வரவில்லை
மாமிசவாடை தூக்கலாக இருப்பதாக
சலித்துக்கொண்டார்.
அவரால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் பட்டியலை
தம்பி பட்டத்திற்கு வாலென
எடுத்துப் போனபிறகு
அடுக்களைக்குள் வந்து தண்ணீர் கேட்டார்.
என் வீட்டுக் குழாயில்
கடல் வருவதில்லை என்றதற்கு
அஞ்சலோட்டத்தில் நான் பின்தங்கிவிட்டதாக
குறைப்பட்டார்.
வெறுங்கால்கள் = அடிடாய்ஸ்
என்ற சூத்திரம் எனக்குப் பிடிபடவில்லை
கைதட்டல்களின் ஓசையில்
தன்னால் உறங்கமுடிவதில்லை
என்றவரைக் குறித்து
தோழியிடம் கேட்டேன்
'ஓடுகளத்தில் அவரைக் கண்டதேயில்லை'என்றாள்.

---

ஒரே மாதிரி

காலையில் எழுந்ததும்
இந்தக் கண்ணாடியைத்தான் பார்க்கிறேன்
கண்ணில் ஒற்றும்
அம்மன் முகத்தில்
பன்னிரு வருசப் பழமைக் கருணை
நேரே நடந்து
இடதுபுறம் திரும்ப குளியலறை
தண்ணீர் நிறமற்றது
தேநீரில் துளி சுவை மாற்றமில்லை
பகல் கனவுகளின் நீட்சியாய்
துரோகமும் கோபமும்.
மாலை நடக்கப்போகும் தெருவில்
மிஞ்சி மிஞ்சிப் போனால்
ஒரு பூ அதிகமாகப் பூத்திருக்கலாம்
'பாப்பா'என்ற பைத்தியக்காரி
இன்றைக்கும் அதே சேலையோடும்
மாறாத வார்த்தைகளோடும்.

இரண்டாவது தலையணை
எப்போதும் நீள்வாட்டில்
டார்ச் லைட்
பாம்புக் கறுப்பாய் பழுப்பு மஞ்சளாய்
10.32 ஆகலாம் இன்று தூங்க
நாளை
இந்த மின்விசிறியில்தான்
தொங்குவேனாயிருக்கும்
அப்போதும் கால்கள்
ஒரே மாதிரியாகவா இருக்கும்?


---

குருதியினும் கனம் மது

நாங்கள் உங்களைப்போலவே வெளியேறினோம்
அன்றேல் வெளியேற்றப்பட்டோம்
பிரிவு கொடியது
எனினும் மரணத்திலும் மெலியது
நெஞ்சுக்கூட்டுக்குள்
குண்டுகள் சிதறும் அதிர்வுடன்
தேசங்களின் எல்லைகளைக் கடந்தோம்.

ஒரு நிந்தனையில்லை

செய்திகளாலும் மரணங்களாலும்
மட்டுமே அறியப்படும் நிலத்தை
காலப்புல் படர்ந்து மூடுகிறது.
மீட்சியிலா பனிச்சேற்றுள்
புதைந்தன எங்கள் பாதங்கள்.

இழித்தொரு சொல்லும் எழுதேன்

எது உனக்குத் திருப்திதரும்?
சமாதானப் பணியாளர்களின் வெளியேற்றம்?
ஆட்சியாளரின் கொடியேற்றம்?
போராளிகளின் பின்னடைவு?

வேலை சப்பித் துப்பிய
விடுமுறை நாட்களில்
சலித்த இசங்களையும்
அழகிய நாட்களையும்
பேசித் தீர்ந்த பொழுதில்
மதுவின் புளித்த வாசனையில்
மிதக்கவாரம்பிக்கிறது தாய்தேசம்.
ஊறுகாயிலும் தொட்டுக்கொள்ள உகந்தது
எதிர் அரசியல்.

வெள்ளை மாளிகையும்
மெளனம் கலைத்த இந்நாட்களில்
உன் மூளைச்சலவை
மிக நன்று.

பேசு!

அவன்...
விமானங்கள் சிதைத்துப்போன
தசைத்துணுக்குகளைப் பொறுக்குகிறான்
தலைகளையும் உடல்களையும்
சரிபார்த்துப் பொருத்துகிறான்
அவள்...
இடம்பெயர்ந்து
சேலைத்திரை மறைவில்
இறுதி இழுபறிபடும் கர்ப்பிணியின்
கைகளைப் பற்றியபடியிருக்கிறாள்
மேலும்
அவனும் அவளும்
எல்லைகளில் இறந்துபோகிறார்கள்
ஒரு புகைப்படமாய்...
தாயின் முகத்தில் கண்ணீர்த்துளியாய்...
தோழர்களின் விழிகளில் கோபமாய்...
துயரம் ததும்பும் ஞாபகமாய்...
உறைகிறான் உறைகிறாள்.

நீ பேசு நண்ப!
பேசுவது எத்தகு இனிமையானது
சுலபமானதும்கூட!

No comments:

Post a Comment